கர்நாடகாவில் வறட்சி நிலவரம் குறித்து 10 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு

பெங்களூர்: கர்நாடகாவில் வறட்சி நிலவரம் குறித்து 10 பேர் கொண்ட நிபுணர் குழு ஆய்வு மேற்கொண்டுள்ளது.

கடந்த மாதம் பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா எழுதிய கடிதத்தில், “கர்நாடகா மாநிலத்தில் மொத்தமுள்ள 236 வட்டங்களில் 195 வட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பகுதிகளை மத்திய அரசு கணக்கெடுத்து விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும். இதற்காக மத்திய நிபுணர் குழுவை கர்நாடகாவுக்கு அனுப்ப வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஏற்று, கர்நாடகாவில் வறட்சி நிலவரம் குறித்து ஆய்வு செய்ய, மத்திய நீர்வளத்துறை இணை செயலாளர் அஜித்குமார் சாஹு, மத்திய நீர்வளத்துறை நிபுணர் டி.ராஜசேகர், மத்திய நீர் ஆணைய தலைவர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில், 10 பேர் கொண்ட நிபுணர் குழுவை, கர்நாடகாவுக்கு, மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

இக்குழுவினர் நேற்று முதல்வர் சித்தராமையாவை சந்தித்து ஆலோசனை நடத்தினர். அப்போது, “கர்நாடகாவில் நிலவும் வறட்சியால், 30 ஆயிரத்து 432 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, மத்திய அரசு, முதற்கட்டமாக, 4 ஆயிரத்து, 860 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்,” என, சித்தராமையா கூறினார். அவர் கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து மத்திய நிபுணர் குழுவை சேர்ந்த அஜித்குமார் சாஹு, டி.ராஜசேகர், அசோக்குமார் தலைமையிலான அதிகாரிகள் 3 குழுக்களாக பிரிந்து கர்நாடகாவின் 28 மாவட்டங்களில் ஆய்வை தொடங்கினர்.

இதையடுத்து, அக்டோபர் 9-ம் தேதி மீண்டும் முதல்வர் சித்தராமையா மற்றும் விவசாய அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.