கிருஷ்ணகிரி அணையிலிருந்து 1099 கன அடி நீர் வெளியேற்றம்

கிருஷ்ணகிரி அணையிலிருந்து 1099 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கா்நாடக மாநிலத்தில் தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணையாற்றில் நீா்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தென்பெண்ணை ஆற்றின் கரையோர பகுதியில் வாழும் கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வருவாய்த் துறையினா் தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்து வந்தனர்.

தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தது.

கிருஷ்ணகிரி அணையின் மொத்த அளவு 52 அடி ஆகும். அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து தற்போது அணையின் நீர்மட்டம் 49.2 அடியாக உள்ளது.

தென்பெண்ணை ஆற்றின் வழியாக ஒசூா் கெலவரப்பள்ளி அணைக்கு வெள்ளிக்கிழமை வினாடிக்கு 880 கன அடி நீா் வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை நீா்வரத்து மேலும் 160 கன அடியாக அதிகரித்து, ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி, நீா்வரத்து 1,099 கன அடி நீா் வந்து கொண்டிருக்கிறது.

கிருஷ்ணகிரி அணையிலிருந்து தென்பெண்ணை ஆற்றில் வினாடிக்கு 1,099 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.