சரக்கு ரெயிலில் மூலம் 1,330 டன் உர மூட்டைகள் நெல்லைக்கு வருகை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியவுடன் விவசாயிகள் நெல் மற்றும் இதர பயிர்களை சாகுபடி செய்ய துவங்குவார்கள். தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் மட்டும் 40,000 ஏக்கர் நெல் நடவு செய்யப்படும். இதுதவிர சிற்றாறு பாசனம் மற்றும் மானாவாரி குளங்களின் பாசன பரப்பு என 1 லட்சம் ஏக்கர் வரை நெல் சாகுபடி செய்யப்படும்.

இந்த பயிர்களுக்கு யூரியா, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் போன்ற உரங்கள் தேவைப்படும். இதையொட்டி வேளாண்மைத்துறை அதிகாரிகள் பிற மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு உர மூட்டைகளை கொள்முதல் செய்து கொண்டு வருகிறார்கள். அதன்படி நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு தேவையான காம்ப்ளக்ஸ் உரம் கேரளா மாநிலம் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து சரக்கு ரெயிலில் 21 பெட்டிகளில் 1,330 டன் உர மூட்டைகள் நெல்லைக்கு கொண்டு வரப்பட்டது.

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டிகளில் இருந்து லாரிகளில் மூட்டைகள் ஏற்றப்பட்டன. இதில் 300 டன் உர மூட்டைகள் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மீதமுள்ள 1,030 டன் உரம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் அடுத்த கட்டமாக கப்பல் மூலம் 8,000 டன் காம்ப்ளக்ஸ் உரம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு விரைவில் கொண்டு வரப்பட உள்ளதாக வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதவிர விவசாயிகளுக்கு நியாயமான விலையில் உரங்கள் விற்பனை செய்வதை கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.