மும்பையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 15-ந் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

இந்தியாவில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாட்டிலே கொரோனா அதிகம் பாதித்த மாநிலமாக மராட்டிய மாநிலம் உள்ளது. மராட்டிய தலைநகர் மும்பையில் கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி கொண்டே வருகிறது.

தற்போது மும்பையில் ‘வைரசை துரத்துவோம்' திட்டத்தின் கீழ் ஓரளவு தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மும்பையில் நேற்று புதிதாக 1,511 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் அங்கு கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 78 ஆயிரத்து 708 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 20 நாட்களுக்கு பிறகு மும்பையில் 1,500-க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது நேற்று தான். மேலும் மும்பையில் மேலும் 75 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால், தற்போது மும்பையில் கொரோனா பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 629 ஆக தெரிவித்துள்ளது. 44 ஆயிரத்து 791 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது மும்பை நகரில் நேற்று 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த தடை வருகிற 15-ந் தேதி வரை அமலில் இருக்கும். தற்போது அங்கு கெடுபிடியை அதிகரிக்கும் வகையில் மீண்டும் 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை மருத்துவம் போன்ற அவசர தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக யாரும் வெளியே வரக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.