மாதவரம் பழ மார்க்கெட்டில் 2 டன் பழங்கள் அழுகி வீணானது; வியாபாரிகள் வேதனை

2 டன் பழங்கள் அழுகி வீணானது... மாதவரம் பழ மார்க்கெட்டில், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்களை, சி.எம்.டி.ஏ., அனுமதிக்காததால், விற்பனை செய்ய முடியாத நிலையில், 2 டன் பழங்கள் அழுகி வீணாகி உள்ளது.

சென்னையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று எதிரொலியால், மாதவரம் புறநகர் பேருந்து நிலையத்தில், 200 தற்காலிக பூ மற்றும் பழக்கடைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், 19ம் தேதி முதல், 30ம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களுக்கு ஊரடங்கு நடைமுறைக்கு வந்தது.

அதனால், மாதவரம் பழ மார்க்கெட்டில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில், சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், மார்க்கெட் உள்ளே செல்ல, சி.எம்.டி.ஏ., நிர்வாகம் தடை விதித்தது. அதற்கான உத்தரவை, மாதவரம் போலீசார், தீவிரமாக செயல்படுத்தி வருகின்றனர்.

இதனால், இரு தினங்களுக்கு முன், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் போலீசாருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. நேற்று முன்தினம் முழு அடைப்பு காரணமாக, மார்க்கெட் திறக்கப்படவில்லை. இந்நிலையில், விற்பனைக்காக இறக்குமதி செய்யப்பட்டிருந்த, ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி, மாம்பழம், மாதுளை, அன்னாசி, பப்பாளி, பலாப்பழம், தர்ப்பூசணி, வாழை, கொய்யா, சப்போட்டா, திராட்சை என, 2 டன் பழங்கள் அழுகி வீணாகின.

அவற்றை பேருந்து நிலையத்தின் ஒரு பகுதியில் குவித்து வைத்துள்ளனர். இதனால், சுற்றுச்சூழல் சீர்கேடு அதிகரித்துள்ளது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:

பழம், பூ வியாபாரத்தின் அடிப்படை பிரச்னை தெரியாமல், சி.எம்.டிஏ., அதிகாரிகளும், போலீசாரும் எங்களை, பலத்த நஷ்டத்திற்கு ஆளாக்கி வருகின்றனர். கடுமையான வெயில் காலத்தில், பழங்களை பாதுகாப்பதற்கான, குளிர்சாதன வசதி ஏதும் இல்லாத, இந்த தற்காலிக கடைகளில் வியாபாரம் செய்ய கட்டாயப்படுத்துகின்றனர்.

மேலும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க, ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்காமல், சர்வாதிகார போக்கில் செயல்படுகின்றனர்.

அதனால், சில்லரை வியாபாரிகள், பொதுமக்களை உள்ளே வர விடாமல் விரட்டி அடிக்கின்றனர். மொத்த வியாபாரிகளையும், வாகனத்துடன் வரக் கூடாது என்கின்றனர். பழங்களை வாங்கி தலையில் வைத்துக் கொண்டா செல்ல முடியும்? இப்படி செய்தால், எப்படி பொருட்களை விற்பனை செய்ய முடியும்? இரண்டு நாட்களில், 2 டன் பழங்கள் அழுகி சேதமடைந்து வீணாகின.

இந்த பிரச்னைக்கு, நியாயமான தீர்வு காண, எங்களுடன் கலந்து பேச வேண்டும். மேலும், எங்களை பொருளாதார நஷ்டத்தில் இருந்து, தடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.