தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 2,64,264 இடங்கள்; அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு தகவல்

தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் கடந்த வாரத்தில் வெளியாகியது. இதனையடுத்து கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்த வருடம் குறிப்பாக பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் அதிகளவில் சேர்ந்து வருகின்றனர்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்-லைன் பதிவு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு வெளியிட்டுள்ளது.

இதன்படி, தமிழகத்தில் உள்ள 500 பொறியியல் கல்லூரிகளில், 2 லட்சத்து 64 ஆயிரத்து 264 இடங்களில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை பொறியியல் படிப்புகளை வழங்கும் 357 கல்லூரிகளில், மொத்தம் 30 ஆயிரத்து 306 இடங்கள் இருப்பதாக அந்த கல்விக் குழு அறிவித்துள்ளது.

இளநிலை மற்றும் முதுகலை பொறியியல் படிப்புகளில் மொத்தமாக, 2 லட்சத்து 94ஆயிரத்து 570 இடங்கள் உள்ளதாக கூறியுள்ளது. பொறியியல் கலந்தாய்வை செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 6ஆம் தேதி வரை நடத்த உயர் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.