ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 3,312 பேர் பணியிடமாற்றம்

சென்னை : தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு மற்றும் பணியிடமாறுதல்களுக்கான கலந்தாய்வு கடந்த மாதம் நடைபெற்றது. இதையடுத்து இதன் வாயிலாக சுமார் 3,312 பேர் பணியிட மாறுதல் ....

தமிழக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கடந்த 8-ம் தேதி பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடங்கியது. இந்நிலையில் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனையடுத்து பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் பணியிடமாறுதல் கலந்தாய்வு வழக்கம் போல நடைபெற்றது.

எனவே இதன் வாயிலாக சுமார் 424 அரசு நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள், 1,111 தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் 1,777 இடைநிலை ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 3,312 பேர் பணியிட மாறுதல் பெற்று உள்ளனர்.

பணியிட மாறுதல்களுக்கு பிறகு பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பணியிடங்களுக்கு தற்போது தொகுப்பூதிய அடிப்படையில் ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.