அரியானாவில் இளம்பெண் கல்லூரி வாசல் முன் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் 3-வது நபர் கைது

அரியானா மாநிலம் பல்லாப்கர் பகுதியில் கடந்த 26 ஆம் தேதிமதியம் 3.30 மணியளவில் கல்லூரியில் தேர்வு எழுதிவிட்டு கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே வந்த இளம் பெண், கல்லூரி வாசல் முன் நின்றுகொண்டிருந்த இரண்டு நபர்களால் சுடப்பட்டார். துப்பாகியால் சுடப்பட்ட அந்த பெண் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டபோது, அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் உயிரிழந்த அந்த பெண்ணின் பெயர் நிகிதா தோமர் என்பதும், கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுத வந்த அவர் கல்லூரி வளாகத்திற்கு வெளியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தௌஃபீக் மற்றும் ரீஹான் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண் நிகிதாவிற்கு தௌஃபீக் ஏற்கனெவே அறிமுகமானவர் என்று தெரிய வந்துள்ளது. தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிகிதாவை தௌஃபீக் வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. நிகிதா துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்படும் முன் அவரை தௌஃபீக் தனது காரில் கடத்தி செல்ல முயற்சித்துள்ளார். ஆனால், அதற்கு நிகிதா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே நடந்த வாக்குவாதத்தில் நிகிதாவை தௌஃபீக் சுட்டுக்கொன்றுள்ளார்.

இந்நிலையில் நிகிதாவை கொல்ல நாட்டுத்துப்பாக்கி வழங்கிய அஜ்ரூ என்ற நபரை அரியானா போலீசார் இன்று கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் தௌஃபீக் தனது மகளுக்கு 3 ஆண்டுகளாக தொல்லை கொடுத்து வந்ததாகவும், அவளை கட்டாய திருமணம் செய்து மதமாற்றத்தில் ஈடுபட தௌஃபீக் முயற்சித்ததாகவும் நிகிதாவின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.