பீகாரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

பீகார் மற்றும் சட்டிஸ்கர் போன்ற மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம். இவர்கள் வன்முறைத் தாக்குதல்கள் மற்றும் அரசின் நலத்திட்ட பணிகளை மேற்கொள்ள விடாமல் அரசு சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற பல சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாவோயிஸ்டுகளை ஒடுக்க சிறப்பு காவல் படையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், பீகார் மாநிலம் பாஷ்சிம் சம்பரன் மாவட்டம் பகாகா பகுதியில் மாவோயிஸ்டுகள் பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, சகஸ்த்திர சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் அங்கு சென்றுதேடுதல் வேட்டை நடத்தினர்.

பின்னர் அங்கிருந்த மாவோயிஸ்டுகளை சகஸ்த்திர சீமா பால் மற்றும் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது மாவோயிஸ்டுகளுக்கும், அதிரடிப்படை போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது.

இந்த துப்பாக்கிச் சண்டையில் 4 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து நவீன ரக ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் இந்த சண்டையில், போலீஸ் தரப்பில் சகஸ்த்திர சீமா பால் இன்ஸ்பெக்டர் காயமடைந்தார்.