கர்நாடகத்தில் ஒரே நாளில் 54 பேர் கொரோனாவுக்கு பலி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நாடு முழுவதும் இதுவரை 7 லட்சத்து 42 ஆயிரத்து 417 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று வரை 20 ஆயிரத்து 642 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நாட்டிலே மராட்டியம், தமிழ்நாடு, டெல்லி, குஜராத் போன்ற மாநிலங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.

தற்போது கர்நாடகமும் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 1,498 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாதபுதிய உச்சமாக ஒரே நாளில் 2,062 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் கொரோனா காரணமாக 54 பேர் பலியாகியுள்ளனர்.

பெங்களூருவில் மட்டும் 1,148 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க கர்நாடக அரசு தவித்து வருகிறது. பெங்களூருவில் வைரஸ் பாதிப்பு பெரும்பாலானவர்களுக்கு எப்படி பரவியது என்பதே தெரியவில்லை என்பதால் அங்கு சுகாதாரத்துறைக்கு பெரும் அவஸ்தி ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை தற்போது, 28 ஆயிரத்து 502 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 11 ஆயிரத்து 876 பேர் கொரோனாவிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். கர்நாடகத்தில் நேற்று 54 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதால், அங்கு கொரோனா பலி எண்ணிக்கை 474 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகத்தில் இதுவரை 7 லட்சத்து 59 ஆயிரத்து 181 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.