ஆகஸ்ட் மாதத்தில் 5ஜி சேவை அறிமுகம்... மத்திய அமைச்சர் தகவல்

புதுடில்லி: மத்திய அமைச்சர் தகவல்... ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியது: 5ஜி அலைக்கற்றைக்கான ஏலப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. வரும் ஆகஸ்ட்-செப்டம்பரில் 5ஜி சேவை உள்நாட்டில் அறிமுகப்படுத்தப்படும். நிகழாண்டு இறுதிக்குள் 20 முதல் 25 நகரங்களில் இந்தச் சேவையை அறிமுகம் செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச கட்டணங்களை ஒப்பிடுகையில் தற்போது டேட்டா சேவைக்கான விலை இந்தியாவில் மிகவும் குறைவாகவே உள்ளது. 4ஜி மற்றும் 5ஜி சேவையை இந்தியா மேம்படுத்தி வருகிறது. மேலும், உலக அளவில் எண்ம (டிஜிட்டல்) நெட்வொா்க்குகளில் நம்பகமான நிலையை வலுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்கள்: சமூக ஊடக தளங்கள் அதிக பொறுப்புணா்வுடன் செயல்பட வேண்டும் என்பதில் தெளிவான மற்றும் ஒருமித்த கருத்து பொதுமக்களிடையே உருவாகியுள்ளது. அவ்வாறு பொறுப்பேற்கச் செய்ய வேண்டுமெனில் அதற்கான சட்ட விதிமுறைகளை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு அதற்கான பணிகளை மேற்கொள்ள உறுதிபூண்டுள்ளது என்றாா் அவா்.