திருச்சி மாவட்டத்தில் புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே 8,760 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

தமிழகத்தில் நேற்று புதிதாக 5 ஆயிரத்து 693 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 2 ஆயிரத்து 759 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 47 ஆயிரத்து 366 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கொரோனா தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 8 ஆயிரத்து 381 ஆக அதிகரித்துள்ளது.

மற்ற மாவட்டங்களை விட சென்னை, செங்கல்பட்டு, கோவை, கடலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனவால் 8,760 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று புதிதாக 86 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதன் காரணமாக மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 8,846 ஆக உயர்ந்து உள்ளது.

திருச்சி அரசு மருத்துவமனை கொரோனா வார்டில் இருந்து நேற்று 35 பேரும், திருச்சி காஜாமலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழக தனிமைப்படுத்தப்பட்ட முகாமிலிருந்து 8 பேரும் பூரண குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 69 வயது ஆண் சிகிச்சை பலனின்றி இறந்தார்.