திருப்பூர் மாவட்டத்தில் புதிதாக 98 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோன பரவலை கட்டுப்படுத்த மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் பரிசோதனை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சராசரியாக நாளொன்றுக்கு 100 என்ற அளவில் இருந்து வருகிறது.

இந்த நிலையில் நேற்று மேலும் 98 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரும் கோவை மற்றும் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதனால் இதுவரை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆயிரத்து 93 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 117 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 11 ஆயிரத்து 875 பேர் குணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது 1,024 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இறப்பு இல்லை. மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 194-ஆக உள்ளது.