தந்தையிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கடத்தல் நாடகம் ஆடிய சிறுவனால் பரபரப்பு

தந்தையிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு கடத்தல் நாடகம் ஆடிய சிறுவனை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த பரபரப்பான சம்பவம் குறித்த விபரம் வருமாறு:-

சென்னை திருவல்லிக்கேணி ஜாம்பஜார் போலீஸ் நிலைய எல்லைப்பகுதியில் உள்ள 14 வயது சிறுவன் ஒருவனை டியூசன் படிக்க சென்ற ஆட்டோவில் வந்த மர்ம கும்பல் கடத்திச்சென்றதாகவும், அந்த சிறுவனை விடுவிக்க வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் பணம் கொடுக்க வேண்டும், என்று மர்மநபர் ஒருவர் போனில் பேசி சிறுவனின் தந்தையிடம் மிரட்டுவதாகவும், போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 8.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக சொல்லப்பட்டது.

இந்த சம்பவம் சென்னை போலீசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. உயர் போலீஸ் அதிகாரிகள் கடத்தப்பட்ட சிறுவனை நல்லபடியாக மீட்க வேண்டும், என்பதில் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டனர்.

இதன் பின்னர் புகார் வந்த சிறிது நேரத்தில் கடத்தப்பட்ட அந்த சிறுவன் வீட்டுக்கு திரும்பி வந்து விட்டதாகவும், கடத்தல்காரர்கள் அந்த சிறுவனை சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகே இறக்கி விட்டு, சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் குறிப்பிட்ட சிறுவனே தனது தந்தையிடம் ரூ.10 லட்சம் பணம் பறிக்க கடத்தல் நாடகம் ஆடியது தெரியவந்தது. மேலும் அந்த சிறுவன், தனது நண்பனான இன்னொரு சிறுவனுடன் சேப்பாக்கம் கிரிக்கெட் விளையாட்டு மைதானம் அருகில் ஆட்டோவில் வந்து இறங்கிய காட்சி, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. அதையும் போலீசார் கண்டுப்பிடித்தனர். பின்னர் அந்த சிறுவனை போலீசார் கடுமையாக எச்சரித்து அனுப்பிவைத்தனர்.