நெதர்லாந்து கடற்பகுதியில் பற்றி எரிந்து சரக்கு கப்பல்... 3000 கார்கள் சேதம்

நெதர்லாந்து: சரக்குகப்பலில் தீவிபத்து... 3000 கார்களுடன் நெதர்லாந்து கடற்பகுதியில் சென்று கொண்டிருந்த சரக்குக் கப்பல் தீப்பற்றியதில் அனைத்து கார்களும் எரிந்து நாசமாயின. இதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளிவந்துள்ளது.

எகிப்து நாட்டை நோக்கி புறப்பட்டுச் சென்ற 'ஃப்ரீமேன்டில் ஹைவே' என்ற சரக்குக் கப்பல் நெதர்லாந்து நாட்டின் அமெலாண்ட் தீவு அருகே சென்று கொண்டிருந்தபோது, அதிலிருந்த 25 எலக்ட்ரிக் கார்களில் ஒன்று திடீரென தீ பற்றி எரிந்தது. அதை அணைக்க முயன்றபோது தீ மளமளவெனன மற்ற கார்களுக்கும் பரவியது. ஏற்பட்ட தீயை அணைக்க கப்பலில் இருந்த பணியாளர்கள் 16 மணி நேரம் முயற்சி செய்தும் முடியவில்லை.

அதன் பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற நெதர்லாந்து தீயணைப்புப் படையினர், கப்பலில் கரும் புகையுடன் கொழுந்துவிட்டு எறிந்த தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். கார்களை ஏற்றிச்சென்ற இந்த கப்பல் பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்டது.

இதில் மொத்தம் 23 ஊழியர்கள் இருந்தனர். இவர்களில் பலர் இந்தியர்கள் என சொல்லப்படுகிறது. இந்த தீ விபத்தில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தீ விபத்தின்போது ஏழு பேர் கடலில் குதித்து தத்தளித்து வந்துள்ளனர். உடனடியாக அங்கு நெதர்லாந்து கடலோரக் காவல் படையினர் வந்ததால், அவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
நெதர்லாந்தில் உள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயிரிழந்த இந்தியரின் குடும்பத்திற்கு தொடர்பு கொண்டு வருகிறோம். அவரின் உடலை நல்ல முறையில் தாயகம் அனுப்பி வைக்க உதவுகிறோம். இந்த பயங்கர தீ விபத்தினால் சரக்கு கப்பலில் இருந்த 3000 கார்களும் எரிந்து நாசமாயின.

கப்பலில் இருந்த எலக்ட்ரிக் வாகனம் தீ பற்றியதால் இந்த மிகப்பெரிய விபத்து நேர்ந்ததால், மக்கள் மத்தியில் எலக்ட்ரிக் வாகனம் சார்ந்த அச்சம் மேலும் அதிகரித்துள்ளது. இதுகுறித்த முழு விசாரணையை நெதர்லாந்து அரசாங்கம் செய்வதாக உறுதியளித்துள்ளது.