சொந்த நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கிய மலையாள பிரபல இயக்குனர்

கேரளா: தனக்குச் சொந்தமான பூர்வீக நிலமான 13.5 சென்ட் நிலத்தை கேரள அரசின் ஏழை எளியோருக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு தானமாக வழங்கி உள்ளார் பிரபல இயக்குனர் அடூர் கோபாலகிருஷ்ணன்.

கேரளத் திரைப்படத்துறையில் 1972ம் ஆண்டு, ‘சுயம்வரம்’ எனும் படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன். இவர் தனது முதல் படத்திலேயே மாஸ்கோ சர்வதேச திரைப்பட விருதுகள் உள்ளிட்ட பல தேசிய விருதுகளைப் பெற்று இந்தியத் திரைப்படத் துறையையே திரும்பிப் பார்க்க வைத்தவர்.

அந்த ஒரு படத்துக்கு மட்டும் நான்கு தேசிய விருதுகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து அவர் இயக்கிய, 'கொடியேட்டம்', 'எலிப்பாதாயம்', 'Anantaram' உள்ளிட்ட பல படங்களுக்கும் தேசிய விருதுகள் கிடைத்தன. திரைப்படங்கள் எடுப்பதை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், ஆவணப் படங்கள், குறும்படங்கள் எடுப்பதிலும் கவனம் செலுத்தியவர் கோபாலகிருஷ்ணன். இவர் திரைப்பட இயக்குநராக மட்டுமின்றி, கதாசிரியராகவும் விளங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் ஒன்றை அறிவித்தார். இந்தத் திட்டத்தின் கீழ் ஏழை எளியோருக்கு வீடு கட்டித் தருவதற்காக அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் எம்.வி.கோவிந்தன், ‘வசதி படைத்தோர் தங்களுக்கு விருப்பமிருப்பின் முதலமைச்சரின் இந்தத் திட்டத்துக்கு உதவலாம்’ என வேண்டுகோள் ஒன்றையும் விடுத்திருந்தார்.

மேலும், 'மனசோதித்திரி மண்ணு' என்ற பெயரில் இந்தத் திட்டத்தை பொதுமக்களிடம் பிரச்சாரமும் செய்தது கேரள அரசு. இதனைத் தொடர்ந்து, மலையாளத் திரைப்பட உலகில் எண்பது வயதான மூத்த இயக்குநர் மற்றும் கதாசிரியர் அடூர் கோபாலகிருஷ்ணன் கேரள மாநிலம், துவாயூர் கிராமத்தில் உள்ள தனக்குச் சொந்தமான பூர்வீக நிலமான 13.5 சென்ட் நிலத்தை கேரள அரசின் ஏழை எளியோருக்கு வீடு கட்டித்தரும் திட்டத்துக்கு தானமாக வழங்க முடிவெடுத்தார்.

மும்பையில் தற்போது ஐபிஎஸ் பணியில் இருக்கும் தனது ஒரே மகளான அஸ்வதியிடம் இதுகுறித்து கலந்து பேசிய அவர், கேரள மாநில உள்ளாட்சித் துறை அமைச்சரை தொலைபேசியில் அழைத்து, ‘தனக்கு சொந்தமான இந்த நிலத்தை அரசுக்கு நன்கொடையாக இல்லாமல், தானமாக வழங்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதையடுத்து, இயக்குநர் கோபாலகிருஷ்ணனின் வீட்டுக்கே வந்து அமைச்சர் நன்றி சொல்லி உள்ள சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் வரவேற்றைப் பெற்றுள்ளது.