வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் மேலும் 38 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து வரப்படுவர்

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மேலும் 38,000 இந்தியர்கள் வெளிநாடுகளிலிருந்து மீட்கப்படுவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுவரை 1,07, 123 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பல நாடுகளில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் பல்வேறு நாடுகளில் பணிபுரிந்து வந்த ஆயிரக்கணக்கான இந்தியர்கள் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தினை கொண்டு வந்தது.

இரண்டு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தில் இதுவரை 1,07, 123 இந்தியர்கள் வெவ்வேறு நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். இத்திட்டத்தின் மூன்றாவது கட்டத்தில் மேலும் 38,000 இந்தியர்கள் அழைத்து வரப்படுவார்கள் என்று மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, ' வந்தே பாரத்தின் இரண்டாம் கட்டத்தில், மே 17 முதல் ஜூன் 13 வரை 103 சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் வந்தே பாரத் திட்டத்தின் மூன்றாம் கட்டத்தில் 31 நாடுகளிலிருந்து 337 விமானங்கள் மூலமாக 38,000 இந்தியர்கள் அழைத்து வரப்பட இருக்கிறார்கள்' இவ்வாறு அவர் தெரிவித்தார்.