துபாயிலிருந்து தங்கம் கடத்தி வந்தவர் சென்னையில் சிக்கினார்

துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

கொரோனா பரவல் எதிரொலியாக இன்னும் சர்வதேச விமான போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மத்திய அரசு வழிகாட்டு நெறிமுறைகளுடன், வெளிநாடுகளில் உள்ளவர்களை அழைத்து வருபவர்களுக்காக சில விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் கொரோனா பரிசோதனை, பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை என தீவிர சோதனைக்கு பிறகே பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

எனினும் வெளிநாடுகளிலிருந்து சென்னை வரும் விமானங்களில் தங்கம் கடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், 86 பயணிகளுடன் துபாயிலிருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட 375 கிராம் தங்கக் கட்டிகளைச் சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

இந்நிலையில் நேற்றும் ரூ.10.33 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாயிலிருந்து இன்டிகோ விமானம் மூலம் சென்னை வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஷாகுல் ஹமீது(44) என்ற பயணியைச் சந்தேகத்தின் பேரில் சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இடைமறித்து விசாரணை நடத்தினர். அப்போது பசை வடிவிலான தங்கப் பொட்டலங்களை தம்முடைய உள்ளாடையில் வைத்துக் கடத்தி வந்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

இதையடுத்து அவரிடம் நடத்தப்பட்ட தனிப்பட்ட சோதனையில் அந்த நபரிடம் இருந்து 201 கிராம்கள் எடை கொண்ட பசை வடிவிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன . இவற்றின் மதிப்பு ரூ.10.33 லட்சமாகும். இந்நிலையில் அந்த நபரைக் கைது செய்துள்ள சுங்கத்துறையினர் தங்கம் கடத்தல் குறித்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.