உலகநாடுகள் உற்பத்தியில் பெரும் இழப்பு ஏற்படும்; ஐ.நா. பொதுச்செயலர் கவலை

உலக நாடுகள் உற்பத்தியில் இழப்பு... கொரோனா தாக்கத்தால் உலக நாடுகளின் உற்பத்தியில் 638 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.நா பொதுச்செயலர் அன்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது:

பல ஆண்டுகளாக ஏராளமான நவீன தொழில்நுட்பங்களையும் அறிவியல் முன்னேற்றங்களையும் கண்டு வந்த உலகம், கொரோனா வைரஸ் மூலம் இதுவரை காணாத இடர்ப்பாட்டை சந்தித்து உள்ளது. இதை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஓரணியில் நின்று ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தவறினால் கடந்த நூற்றாண்டின் துவக்கத்தில் நிகழ்ந்த மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை மீண்டும் சந்திக்க நேரிடும்.

ஆறு கோடிக்கும் அதிகமானோர் வறுமையில் தள்ளப்படுவர். உலகளவில் உழைக்கும் மக்களில் பாதி பேர் அதாவது 160 கோடி பேர் வேலையின்மையால் வாழ்வாதாரத்தை இழப்பர். உலக நாடுகள் ஒற்றுமையின்மையால் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் உள்ளன. உதாரணமாக சமூகத்தில் நிலவும் அளவிற்கதிகமான பொருளாதார ஏற்றத்தாழ்வு பருவ நிலை மாற்றம் பெருகிவரும் கணினி சார்ந்த குற்றங்கள் அணு ஆயுத பரவல் போன்றவற்றால் பிரச்னைகள் அதிகரித்து வருவதை காண்கிறோம்.

இனிமேல் உலக நாடுகள் ஒற்றுமையாக செயல்பட்டு நிலையான பொருளாதார மீட்சிக்கும் சுகாதாரம் மக்களின் வாழ்வாதாரம் ஆகியவற்றின் மேம்பாட்டிற்கும் முதலீடு மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.