கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

தாளவாடி: சிறுத்தை விரட்டியடிப்பு... தாளவாடி மலைப்பகுதியில் கரும்புத் தோட்டத்தில் பதுங்கியிருந்த சிறுத்தையை பிரத்யேக கவச உடை அணிந்து வனத்துக்குள் வனத்துறையினர் விரட்டினர்.

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் வசிக்கின்றன.

யானை, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்துவதும், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளை வேட்டையாடுவதும், தொடர்கதையாக உள்ளது.

இந்த நிலையில் தாளவாடி மலைப்பகுதி மல்குத்திபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி குருசாமி என்பவரது கரும்புத் தோட்டத்திற்குள் சிறுத்தை நடமாடுவதாக தாளவாடி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆசனூர் மாவட்ட வன அலுவலர் அறிவுரையின் பேரில் தாளவாடி வனச்சரகர் சதீஷ் தலைமையில் வனத்துறை ஊழியர்கள் குருசாமியின் கரும்பு தோட்டத்துக்குச் சென்றனர்.

அப்போது கரும்புத் தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தையை விரட்டுவதற்காக வனத்துறை ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கவச உடையை அணிந்தபடி துப்பாக்கியுடன் கரும்பு தோட்டத்திற்குள் வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணி மேற்கொண்டு அங்கு பதுங்கி இருந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டி அடித்தனர்.