அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது .. வானிலை மையம் தகவல்


சென்னை: நேற்று காலை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஓர் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது. இதையடுத்து இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,

மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது வருகிற 21-10-2023 வாக்கில் மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக, வருகிற 20-10-2023 வாக்கில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இந்த நிலையில் தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகவுள்ளது. தமிழ்நாடு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.