வடக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு ..வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பு

சென்னை: வடக்கு வங்கக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது அதற்கடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது

இதையடுத்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 7 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

இதற்கு இடையே வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 04.09.2023 முதல் 08.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.