புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வங்கக்கடல் நாளை உருவாக வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளதாவது:-தென்கிழக்கு அரபிக்கடல், அதை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.இதையடுத்து இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து,

மத்திய கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும். இது வருகிற 21-ம் தேதி மத்திய அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

இதேபோன்று, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இதன் காரணமாக நாளை மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதனால் தமிழகத்தில் மழை வாய்ப்பு குறையுமா, அதிகரிக்குமா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் வரை நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நாளை முதல் வரும் 24-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.