இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை; அமைச்சர் எச்சரிக்கை

இ-பாஸ் முறைகேட்டில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உதயகுமார் எச்சரித்துள்ளார். தமிழகம் முழுவதும் பல வகையிலும் இ-பாஸ் முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகார்களின் பேரில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் மட்டும் அதிகளவில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது மற்ற மாவட்டங்களிலும் வேகமாகப் பரவத் துவங்கியது. இதை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கட்டாயம் இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது.

இடையில் தமிழகம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, மண்டலங்களுக்குள் பொது போக்குவரத்து நடைபெறலாம் என்றும், இ-பாஸ் இன்றி பயணிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்தது. கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கவே பொதுப் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டு, இ-பாஸ் முறை மீண்டும் அமலுக்கு வந்தது. நெருங்கிய உறவுகளின் திருமணம், இறப்பு மற்றும் அவசர மருத்துவத்திற்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

எனினும், மாத்திரை வாங்குவது உள்ளிட்ட நியாயமான காரணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தவர்களுக்கு நிராகரிக்கப்பட்டது. ஆனால் டிராவல்ஸுகளுக்கு மட்டும் தாராளமாக இ-பாஸ் கிடைப்பதாகவும், அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இ-பாஸ் வாங்கிக் கொடுக்கவே இடைத் தரகர்கள் செயல்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய் துறை அமைச்சர் உதயகுமார், “மாவட்டத்திற்குள் இ-பாஸ் இல்லாமலும், மாவட்டம் விட்டு மாவட்டம் செல்லும் போது இ-பாஸ் கட்டாயம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக விண்ணப்பம் செய்பவர்களுக்கு மட்டுமே இ-பாஸ் வழங்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

மேலும், “இ-பாஸ் வழங்கும் பணியில் ஈடுபட்டு வருபவர்கள் விண்ணப்பதாரர்களை மனித நேயத்துடனும், மனசாட்சியுடனும் அணுக வேண்டும். இ-பாஸ் வழங்குவதில் முறைகேட்டில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் இ-பாஸ் வழங்குவதில் முறைகேடுகளில் ஈடுபடுபவர்கள் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார்கள்” எனவும் குறிப்பிட்டார்.