56 நாட்களுக்குப் பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடியை எட்டியுள்ளது


மேட்டூர் : மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக கடந்த ஜூன் 12-ம் தேதி முதல் தண்ணீர்திறக்கப்பட்ட நிலையில், தென்மேற்குப் பருவமழைக்காலத்தில் அணைக்கு போதிய நீர்வரத்து இல்லாததால், அணையின் நீர்மட்டம் வேகமாக சரிந்தது. கடந்த 10-ம் தேதி அணையின் நீர்மட்டம் 30.90 அடியாக வீழ்ச்சியடைந்தது.

இந்த நிலையில், அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு163 கனஅடியாக குறைந்ததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது. அணையிலிருந்து காவிரிக் கரையோர மாவட்டங்களின் குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி மட்டும் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.


இதன் இடையில், காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்ததால் தற்போது அணைக்கு நீர்வரத்து சற்று உயர்ந்துள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் விநாடிக்கு4,114 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று 4,334 கனஅடியாக உயர்ந்துள்ளது.

இதனால் அணையின் நீர்மட்டம் 48.36 அடியிலிருந்து நேற்று 49.38 அடியாக உயர்ந்தது. கடந்த ஆகஸ்ட்30-ம் தேதிக்குப் பின்னர், அணையின் நீர்மட்டம்மீண்டும் 50 அடியை எட்டும் நிலை உருவாகி உள்ளது. அணையின் நீர்இருப்பு நேற்று 17.42 டிஎம்சியாக இருந்தது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.