வேளாண்மை சந்தைகள் மசோதா விவசாயிகளுக்கு மரண சாசனம் - சித்தராமையா

நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியை பயன்படுத்தி வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வலுக்கட்டாயமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதா விவசாயிகளுக்கு மரண சாசனம் என கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், நமது நாட்டின் ஒரே நம்பிக்கை விவசாயம். அதற்கும் மத்திய அரசு இறுதி முடிவுக்கட்டி இருப்பது வேதனையானது. விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை சபை ஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இதை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்?. விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்களால் அரசின் உதவி இன்றி வேளாண்மை சந்தைகளை நிர்வகிக்க முடியாது என்று கூறினார்.

வேளாண்மை சந்தைகளை நாசப்படுத்துவது என்பது, ஒட்டுமொத்த விவசாயத்துறையையே நாசப்படுத்துவதற்கு சமம். அதாவது வேளாண்மை சந்தைகளின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் சுதந்திரமாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பது தான் இந்த மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவின் நோக்கம். நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் செயல் ஆகும் என சித்தராமையா தெரிவித்தார்.

மேலும் சித்தராமையா பேசுகையில், விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை அம்சம் அந்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனாதைகளாக ஆகிவிடுவார்கள். வேளாண்மை சந்தைகளில் வியாபாரிகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. வரி வசூலிக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் தங்களின் இஷ்டம் போல் செயல்படலாம். தனியார் நிறுவனங்கள் விளைபொருட்களை பதுக்கி அவற்றின் விலையை செயற்கையான வழியில் உயர்த்த முயற்சி செய்யும். வேளாண்மை சந்தைகள் திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது என்று கூறினார்.