அதிமுக முன்னாள் அமைச்சர் வீடு உட்பட 49 இடங்களில் சோதனை

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் வீடு, அலுவலக் உள்ளிட்ட 49 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனையில் ஈடுபட்டனர். இதனை கண்டித்து அக்கட்சியின் தொண்டர்கள் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.

காமராஜ் நன்னிலம் தொகுதியில் இருந்து அதிமுக சார்பில் தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு, காமராஜ் இந்து சமய மற்றும் அறநிலையத்துறை அமைச்சராகவும், உணவுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.
2017- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வருமான வரி தொடர்பான சோதனைகளை நடத்தும் அதிகாரிகளைத் தடுத்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டு, காவல்துறை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த 3 அதிமுக அமைச்சர்களில் காமராஜும் ஒருவர்.

இவர் 2015- ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2021-ஆம் ஆண்டு மார்ச் 31 வரையிலான கால கட்டத்தில் அமைச்சராக பதவி வகித்தப்போது, அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, ரூ.58.44 கோடி மதிப்பில் வருமானத்திற்கும் அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் மன்னார்குடியில் உள்ள அவரது வீடு, அலுவலகம், சென்னை, திருவாரூர், தஞ்சை, திருச்சியில் உள்ள ஹோட்டல் உள்ளிட்ட 49 இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் உள்ளிட்ட 6 பேர் வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.. சோதனையைக் கண்டித்து, மன்னார்குடியில் உள்ள அவரது வீட்டின் முன்பு அதிமுக தொண்டர்கள் குவிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அண்மையில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர் செல்வம் என்று 2 அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில் எடப்பாடியின் ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடைபெற்று வருவது. அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.