அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி வெற்றி பெற்றது செல்லும் .. தலைமை தேர்தல் ஆணையம்

சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடியை அங்கீகரித்தது தேர்தல் ஆணையம் .... அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் உச்சகட்டத்தை எட்டியதை தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டார். எனவே இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் வழக்கு தொடர்ந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.

இதற்கு இடையே அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் நடத்தப்பட்டு அதில், எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கோரி தேர்தல் ஆணையத்திடம் முறையிடப்பட்டது. இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமியை அதிமுவின் பொதுச்செயலாளராக அங்கீகரிக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்திற்கு ஓ.பன்னீர்செல்வம் மனு அளித்துள்ளார்.

இதையடுத்து இந்த வழக்கில் தேர்தல் கமிஷன் உரிய முடிவை எடுத்து 21-ம் தேதிக்குள் கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவுக்கான காலக்கெடு நாளை முடிவடைகிறது. இதை கருத்தில்கொண்டு தேர்தல் கமிஷன் இதுதொடர்பாக நேற்று ஆலோசனை நடத்தியது. இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜீவ்குமார் தலைமையிலான அதிகாரிகள் காலையிலும், மாலையிலும் 2 கட்ட அமர்வுகளில் இது தொடர்பாக ஆலோசித்தனர். தேர்தல் கமிஷன் ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவுகள் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக இருக்கக்கூடும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்நித லையில், அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி வெற்றி பெற்றது செல்லும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்திக் கொள்ளவும்‌ அனுமதி வழங்கப்பட்டுள்ளது.