இலங்கைக்கான விமானங்களை குறைத்த விமான நிறுவனங்கள்

இலங்கை: இலங்கையில் எரிபொருள் கையிருப்பு பலவீனமானதன் காரணமாக சில விமான நிறுவனங்கள் இலங்கைக்கான விமானங்களை மேலும் குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிடம் விமான நிறுவன பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளதாக அமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சில விமான நிறுவனங்கள் இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் இருந்து இந்த நாட்களில் எரிபொருளை பெற்று வருவதாக துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கைக்கான விமானங்களின் எண்ணிக்கை மேலும் குறையும் பட்சத்தில் சுற்றுலாத்துறை, ஏற்றுமதி, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்பதால், தற்போதுள்ள விதிகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும் அல்லது இந்த நிலையை கடக்க வேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதற்கிடையில், இந்த பிரச்சினைக்கு தீர்வாக, தனியார் துறை எரிபொருள் இருப்புதாரர்கள் விமான எரிபொருளை இறக்குமதி செய்ய அனுமதிக்கும் முடிவை அரசாங்கம் ஏற்கனவே எடுத்துள்ளது. இதற்கு அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.

இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நிலை மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகையும் வெகுவாக குறைந்துள்ளதாக அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.