தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயருகிறது

சென்னை: தமிழகத்தில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி மாதம் ஒரு முறையும், மே மாதம் ஒரு முறையும் தனியார் பால் விலை உயர்த்தப்பட்டிருந்தது. இந்தநிலையில் 3-வது முறையாக தனியார் பால் விலை உயர்த்தப்படுகிறது. தமிழகம் முழுவதும் தனியார் பால் விலை இன்று (வெள்ளிக்கிழமை) முதல் உயருகிறது.

எனவே அதன்படி சீனிவாசா பால் நிறுவனம் பால் விலையை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தி இருக்கிறது. இதையே அடுத்து ஹட்சன் நிறுவனம் பால் மற்றும் தயிர் விலையை லிட்டருக்கு ரூ.4 உயர்த்த இருக்கிறது. மற்ற நிறுவனங்களும் பால் விலையை அடுத்தடுத்த நாட்களில் உயர்த்த திட்டமிட்டுள்ளன. அதன்படி லிட்டருக்கு ரூ.4 வரை விலையை உயர்த்த பல தனியார் பால் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதை தொடர்ந்து தனியார் பால் விலை உயர்வு காரணமாக பால் சார்ந்த இதர பொருட்களும் விலை உயரும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இந்த புதிய முடிவு, பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- தமிழகத்தில் 84 சதவீத பாலின் தேவை, தனியார் பால் நிறுவனங்கள் மூலமே பூர்த்தி செய்யப்படுகிறது. இதனால் எந்தவித யோசனைகளும் செய்யாமல், யாருடைய கருத்தையும் கேட்காமல் தாங்களாகவே தன்னிச்சையாக பால் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகிறார்கள். இந்த போக்கு மிகவும் தவறானது.