பாஜகவுடன் கூட்டணியா? விளக்கம் அளித்தார் முன்னாள் முதல்வர் குமாரசாமி

கர்நாடகா: கூட்டணி திட்டம் இல்லை... நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் திட்டம் எதுவும் இல்லை என மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலில் மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுடன் மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் தேவகவுடா கலந்து கொண்டார். ஒடிசா ரயில் விபத்துக்கு பொறுப்பேற்று அஷ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், அஸ்வினி வைஷ்ணவ் சிறப்பாக செயல்படுகிறார் என்று தேவகவுடா கூறினார்.

இதனால் பாஜக – மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி அமைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு மறுப்பு தெரிவித்த மதச்சார்பற்ற ஜனதா தள மூத்த தலைவர் குமாரசாமி, 20 ஆண்டுகளாக தேசிய கட்சிகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறேன். கூட்டணி குறித்த யூகங்கள் எப்படி வெளியாகிறது என்பது புரியவில்லை என்றும் குமாரசாமி கூறினார்.