அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் நலன் கருதி கூடுதல் இடங்கள் ஒதுக்கீடு

தமிழகத்தில் 109 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ளன. இக்கல்லுரிகளில் உள்ள 87 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களுக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்துள்ளனர். இதனால் மாணவர்களின் நலன் கருதி அரசு கூடுதலாக இடங்களை ஒதுக்கியுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மை செயலாளர் அபூர்வா வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது:-

அரசு கல்லூரிகளில் 2020-2021-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கு அதிகளவில் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ள காரணத்தால், மாணவ-மாணவிகளின் நலன் கருதி தேவையுள்ள பாடப்பிரிவுகளில் கூடுதலாக மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி வழங்குமாறு கல்லூரிக்கல்வி இயக்குனர் அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.

கல்லூரிக்கல்வி இயக்குனரின் இந்த கருத்தை பரிசீலித்த அரசு, 2020-2021-ம் கல்வியாண்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், கலை பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு 20 சதவீதம் கூடுதலாகவும் மாணவ-மாணவிகளை சேர்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணையிடுகிறது.

இந்த கூடுதல் மாணவர்கள் சேர்க்கைக்கு சார்ந்த பல்கலைக்கழகங்களின் அனுமதி பெறவேண்டும் எனவும் அரசு உத்தரவிடுகிறது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.