வடகொரியாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக B-1B லான்சரை பயிற்சியில் களமிறக்கிய அமெரிக்கா

அமெரிக்கா: B-1B லான்சரை பயிற்சியில் களமிறக்கி வடகொரியாவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது அமெரிக்கா. இதனால் பதற்றம் அதிகரித்துள்ளது.

கொரிய வளைகுடாவில் வட - தென் கொரியாக்களுக்கு இடையில் பதற்றங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா தனது நாசகாரகுண்டு வீச்சு விமானமான B-1B லான்சரை பயிற்சியில் களமிறக்கியிருந்தமை வடகொரியாவுக்கான எச்சரிக்கையாக நோக்கப்படுகிறது.

தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து விஜிலன்ற் ஸ்ரோம் என்ற குறியீட்டுப் பெயரிலான படை ஒத்திகை பயிற்சியின் இறுதிநாளில் இந்தக் குண்டுவீச்சு விமானம் பங்கேற்றுள்ளது. இந்த வாரம் வட கொரியா அதிக ஏவுகணைகளை ஏவிய நிலையில், அமெரிக்கா 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கொரிய வளைகுடாவில் B-1B லான்சரை களமிறக்கி தனது வான் சக்தியைக் காட்டியுள்ளது.

இந்த போர்விமானம் உலகின் நாசகார போர்விமானங்களில் முக்கியமானது. இவை ஒரே தடவையில் நாசகார குண்டுகளை எதிரிகளின் இலக்குகள் மீது வீசும் வலிமை படைத்தவை. ஏற்கனவே 180 வடகொரிய போர் விமானங்கள் பியொங்ஜொங் வான்பரப்பில் அணிவகுத்த நிலையில், அதற்கு பதிலடியாக நேற்று தென்கொரியாவும் தனது 80 அதிநவீன போர் விமானங்களை களமிறக்கியது.

இந்த நிலையில் B-1B லான்சரும் களமிறக்கபட்டதால் கொரிய வளைகுடா பதற்றத்துக்கு சென்றுள்ளது. நேற்று திட்டமிட்டபடி இந்த கூட்டு இராணுவ ஒத்திகை முடிவடைய இருந்த போதிலும், இந்த விமானத்தை களம் இறக்குவதற்காக அந்தப் பயற்சி மேலும் ஒரு நாள் நீடிக்கப்பட்டு நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.