அமெரிக்காவில் நடந்த விபத்தில் இந்திய டாக்டரின் மனைவி, மகள்கள் பலி

விஜயவாடா: விபத்தில் இந்திய மருத்துவரின் மனைவி பலி... அமெரிக்காவில் திங்கள்கிழமை இரவு நிகழ்ந்த கார் விபத்தில், இந்திய மருத்துவரின் மனைவி மற்றும் இரண்டு மகள்கள் பலியாகினர்.

விஜயவாடாவைச் சேர்ந்தவர் மருத்துவர் கோடாலி நாகேந்திர ஸ்ரீனிவாஸ். அமெரிக்காவில் குடும்பத்துடன் வசித்து வந்தார். வட அமெரிக்கா தெலுங்கு அமைப்பினரின் தலைவராகவும் உள்ளார்.

டெக்ஸாஸ் மாகாணத்தில் வால்லர் கௌண்டியில் நாகேந்திர ஸ்ரீனிவாஸ் மனைவி வாணிஸ்ரீ மற்றும் இரண்டு மகள்களும் பயணித்த சேடன் கார் மீது வேன் மோதியதில் மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பலியானதாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

காரை ஓட்டிச் சென்ற வாணிஸ்ரீ, சாலைச் சந்திப்பு ஒன்றில் காரை நிறுத்தாமல் சென்றதே இந்த விபத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. சம்பவ இடத்திலேயே வாணிஸ்ரீயும் மூத்த மகள் மேக்னாவும் உயிரிழந்ததாகவும் இளைய மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பலியானதாகவும் கூறப்படுகிறது.

வேனை ஓட்டி வந்த ஓட்டுநரும், அவரது இரண்டு மகள்களும் லேசான காயமடைந்தனர். நாகேந்திர ஸ்ரீனிவாஸ் கிருஷ்ணா மாவட்டம் குருமட்டள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும், குண்டூர் மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயின்றி 1995ஆம் ஆண்டு அமெரிக்கா சென்று உயர் கல்வி பயின்றி, ஹூஸ்டனிலேயே தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.

மனைவி வாணிஸ்ரீயும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். மூத்த மகள் மேக்னா மருத்துவமும், இளைய மகள் பள்ளியிலும் பயின்று வந்துள்ளனர்.