பாஜகவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்ட பேஸ்புக் பெண் நிர்வாகி அங்கிதாஸ் நிறுவனத்தில் இருந்து விலகல்

‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனத்தின் இந்தியாவுக்கான கொள்கை பிரிவு தலைவராக இருந்த அங்கிதாஸ், பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்தார். இதனால் அவர், பா.ஜனதா மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் தலைவர்களுடைய வெறுப்பு பேச்சுகளை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்குவதற்கு முட்டுக்கட்டை போட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதுகுறித்து அமெரிக்க பத்திரிகை ஒன்று கடந்த ஆகஸ்டு மாதம் செய்தி வெளியிட்டது. மேலும், ‘பேஸ்புக்’ ஊழியர்களுக்கான தனி குழுவில் அவர் பா.ஜனதாவுக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிட்டு வந்ததாகவும் தகவல் வெளியானது. இது சர்ச்சை ஆனது.

சசிதரூர் தலைமையிலான நாடாளுமன்ற நிலைக்குழு விசாரணைக்கு அங்கிதாஸ் அழைக்கப்பட்டார். அவருக்கு எதிராக மனித உரிமை அமைப்புகளும் குரல் கொடுத்தன. தற்போது, அங்கிதாஸ் நேற்று ‘பேஸ்புக்’ நிறுவனத்தில் இருந்து விலகினார்.

பொதுச்சேவையில் ஈடுபடுவதற்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். ‘பேஸ்புக்’ இந்தியாவுக்கான நிர்வாக இயக்குனர் அஜித் மோகனும் இந்த அறிவிப்பை வெளியிட்டார். 9 ஆண்டுகளாக நிறுவனத்தின் வளர்ச்சியில் அங்கிதாஸ் முக்கிய பங்கு வகித்ததற்கு பாராட்டு தெரிவித்தார்.