அண்ணாநகர் கோபுர பூங்கா... புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்டது

சென்னை: அண்ணாநகரில் உள்ள கோபுர பூங்கா புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது

சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுரா பூங்கா பழமையான பூங்காக்களில் ஒன்று. பூங்காவில் 135 அடி உயர கோபுரம் உள்ளது. இந்த கோபுர பூங்கா அண்ணாநகரின் முக்கிய அடையாளமாக இருந்தது. பூங்காவில் உள்ள கோபுரத்தில் ஏறி மக்கள் சென்னை நகரின் அழகை ரசித்தனர்.

இந்நிலையில் காதலில் தோல்வியடைந்த சிலர் இந்த கோபுரத்தின் உச்சியில் ஏறி தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நடந்துள்ளன. இதன் காரணமாக கடந்த 2011ம் ஆண்டு முதல் கோபுரத்தில் ஏற தடை விதிக்கப்பட்டது.

எனவே, கோபுரத்தையும், பூங்காவையும் நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சீரமைக்க சென்னை மாநகராட்சிக்கு பூங்காவுக்கு வரும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, மாநகராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கீடு செய்து, நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் கோபுரத்தை சீரமைத்தது. கோபுரத்தின் ஓரங்களில் தடுப்புகள் மற்றும் இரும்பு வேலிகள் அமைக்கப்பட்டன.

புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. நகராட்சி நிர்வாக அமைச்சர் கே.என்.நேரு கோபுரத்தை திறந்து வைத்தார்.