பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு; முகக்கவசம் அணிவதில் விலக்கு

முகக்கவசம் அணிவதில் விலக்கு... கடந்த 13 நாட்களாக புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகாத நிலையில் பொதுமக்கள் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்களித்து பெய்ஜிங் அரசு உத்தரவிட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பரவலில் இருந்து தற்காத்துக் கொள்ள முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளிகளைப் பின்பற்றுவது, கைகளை அடிக்கடி சோப்புப் போட்டுக் கழுவுவது போன்ற சுகாதார நடவடிக்கைகள் பின்பற்றப்படுகின்றன. இந்நிலையில் சீனாவின் பெய்ஜிங்கில் தொற்று பாதிப்புகள் குறைந்ததையடுத்து ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி மக்கள் பொதுவெளியில் முகக்கவசங்களுடன் வருவதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 13 நாட்களாக தொடர்ச்சியாக புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகாததால் இந்தத் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்கில் கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது இது இரண்டாவது முறையாகும்.

முன்னதாக ஏப்ரல் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்ட தளர்வைத் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்தது. இதனால் உடனடியாக தளர்வு நடவடிக்கைகள் திரும்பி பெறப்பட்டன. சீனாவில் இதுவரை 84 ஆயிரத்து 917 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.