இங்கிலாந்தில் புதிய வகை வைரஸ் பரவலுக்கு மத்தியில் 2-வது கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல்

சீனாவில் கடந்த ஆண்டு தோன்றிய உயிர்க்கொல்லி கொரோனா வைரஸ் ஓராண்டாக உலகை உலுக்கிக்கொண்டிருக்கிறது. இந்த கொடிய வைரசை அழிப்பதற்கான தடுப்பூசிகள் ஒருசில நாடுகளில் மக்களின் பயன்பாட்டுக்கு வந்திருப்பது உலக மக்கள் அனைவருக்கும் நிம்மதியளிப்பதாக அமைந்துள்ளது. உலகிலேயே முதல் நாடாக இங்கிலாந்து தான் கொரோனா தடுப்பூசியை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வந்தது.

அமெரிக்காவின் பைசர் மற்றும் ஜெர்மனியின் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து அங்கு கடந்த 8-ந்தேதி முதல் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியிருப்பது ஒட்டுமொத்த உலகத்தையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டன் மற்றும் அந்த நாட்டின் தெற்கு பகுதிகளில் ஒரு புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த புதிய வகை வைரஸ் ஏற்கனவே பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனாவை விட 70 சதவீதம் அதிவேகமாக பரவி வருவதாக இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகியவை இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக செயல்படும் என அஸ்ட்ராஜெனெகா நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

எனவே புத்தாண்டுக்கு முன்பாக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளிக்கும் என அரசு வட்டார தகவல்கள் தெரிவித்தன. இங்கிலாந்தில் ஏற்கனவே பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கும் நிலையில், 2-வது தடுப்பூசிக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து வருகிற 4-ந்தேதி முதல் ஆக்ஸ்போர்டு தடுப்பூசியை மக்களுக்கு செலுத்தும் பணி தொடங்கும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கான ஒப்புதல் இங்கிலாந்தில் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒரு மாற்று சக்தியாக இருக்கும் என கருதப்படுகிறது.