வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள்

பிரேசில்: பிரேசிலின் சாண்டா கேடரினா மாகாணத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவ ஹெலிகாப்டர்கள் ஈடுபட்டுள்ளன.

இந்த மாகாணத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் 17 நகரங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்து பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். தொடர் மழை பெய்த வண்ணமாக இருப்பதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் பாதித்த பகுதியில் வீட்டின் மேல்தளத்தில் சிக்கித் தவித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

பிரேசிலின் பரானா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மாயமான 30 பேரை தெர்மல் கேமராக்களை பயன்படுத்தி தீயணைப்பு வீரர்கள் தேடிவருகின்றனர். தொடர் கனமழையால், நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ள மலைத்தொடரில் ஏற்பட்ட நிலச்சரிவில் 20க்கும் மேற்பட்ட வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன.

இதுவரை 2 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். நிலச்சரிவில் சிக்கிய குவாரடியூபா நகர மேயரும், அவரது ஓட்டுநரும் காரின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியேறியுள்ளனர்.