அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 104 ஆக உயர்வு

இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பீகார், அசாமில் கடந்த சில வாரமாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது.

மேலும் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

தற்போது, அசாமில் பெய்து வரும் கனமழையில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 104 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் உள்ள 21 மாவட்டங்களில் உள்ள 19 லட்சம் மக்கள் வெள்ளத்தால் கடுமையாக பாதிப்பு அடைந்துள்ளனர்.

வெள்ளத்தில் சிக்கிய மக்களை பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்டு பல்வேறு நிவாரண முகாம்களில் தங்க வைத்துள்ளனர். மேலும் இந்த வெள்ளத்தில் சிக்கியுள்ள மற்றும் காணாமல் போனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது.