சென்னையில் கொரோனாவுக்கு காவல்துறை உதவி ஆய்வாளர் உயிரிழப்பு

சென்னை காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த எஸ்.ஐ. குருமூர்த்தி கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 42 ஆயிரத்து 798 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 2,032 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மாவட்டம் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையில் முதலிடத்தில் உள்ளது.

கொரோனா நோய் தொற்று பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கில் முன்வரிசையில் நின்று காவல்துறையினர் பணியாற்றி வருகின்றனர். இதனால் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் காவலர்களும் கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பல காவலர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையின் நவீன கட்டுப்பாட்டு அறையில் உதவி ஆய்வாளராக எஸ்.ஐ. குருமூர்த்தி (55) பணியாற்றி வந்தார். மதுராந்தகத்தை சேர்ந்த அவர் சென்னை மேற்கு தாம்பரம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார்.

அயல்பணியாக மீனம்பாக்கம் காவல்நிலைய ரோந்து பணி பொறுப்பாளராக இருந்தபோது கொரோனா தொற்று உறுதியானது. ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் எஸ்.ஐ. குருமூர்த்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

எஸ்.ஐ. குருமூர்த்தி மரணத்தை தொடர்ந்து சென்னை காவல்துறையில் போலீசார் உயிரிழப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.