பெங்களூருவில் ஊரடங்கு உத்தரவை மீறி மோட்டார் சைக்கிள் ஓட்டிய வாலிபர் கைது

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் அசுரவேகத்தில் பரவி கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க பெங்களூருவில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையின்றி யாரும் வெளியே வாகனங்களில் சுற்றிதிரிய கூடாது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் பெங்களூருவில் கடந்த சில தினங்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலானது. அந்த வீடியோவில் ஒரு மேம்பாலத்தில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டி செல்வது போன்று இருந்துள்ளது.

இந்த வீடியோ பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு சென்றபோது, இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் மோட்டார் சைக்கிளை 300 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட்டி சென்றது பெங்களூருவை சேர்ந்த முனியப்பா என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஊரடங்கு உத்தரவை மீறி எலெக்ட்ரானிக் சிட்டி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக முனியப்பா ஓட்டி சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் அவரை கைது செய்தனர். முனியப்பா மீது எலெக்ட்ரானிக் சிட்டி போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.