ஒத்துழைப்பே தராததால் பீஹார் வழக்குப்பதிவு செய்யப்பட்டது

ஒத்துழைப்பு தரவில்லை... 'நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் மஹாராஷ்டிரா போலீசார் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே, பாட்னாவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது' என, பீஹார் அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது.

'பாலிவுட்' நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், கடந்த ஜூன் 14ல், மஹாராஷ்டிராவின் மும்பை நகரில் உள்ள வீட்டில், துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கில், சுஷாந்தின் காதலி, ரியா சக்கரவர்த்தி மீது சுஷாந்தின் தந்தை, பீஹார் போலீசில் புகார் அளித்தார்.

இதையடுத்து சுஷாந்தை தற்கொலைக்கு துாண்டியதாக ரியா மீது, பாட்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை, பாட்னாவில் இருந்து மும்பைக்கு மாற்றக் கோரி ரியா சக்கரவர்த்தி சார்பில் உச்ச நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ''ரியா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கும், பீஹார் மாநிலத்திற்கும், எந்த சம்பந்தமும் இல்லை.

அந்த வழக்கு, முழுக்க, முழுக்க, மும்பை சம்பந்தப்பட்டது. இதில், மாநில அரசின் தலையீடு உள்ளது,'' என ரியாவின் வழக்கறிஞர், ஷியாம் திவான், நீதிமன்றத்தில் தெரிவித்தார். பீஹார் அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மணிந்தர் சிங் கூறியதாவது:

சுஷாந்த் சிங்கின் மரணம் தொடர்பாக, மும்பையில் இதுவரை எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்படவில்லை. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையை பீஹார் போலீசிடம், மஹாராஷ்டிரா போலீசார், இதுவரை ஒப்படைக்கவில்லை. இந்த வழக்கில் மஹாராஷ்டிரா போலீசார் ஒத்துழைப்பு தர மறுக்கின்றனர். எனவே தான் முறைப்படி, பீஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மற்றபடி இந்த வழக்கில் அரசியல் தலையீடு உள்ளது என கூறுவதில் உண்மையில்லை. இவ்வாறு, அவர் கூறினார்.

மறைந்த சுஷாந்த் சிங்கின் வங்கிக் கணக்கில் இருந்து, 15 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்ற பணப்பரிமாற்றம் குறித்து, அமலாக்கத் துறையினர் விசாரித்து வருகின்றனர். இது குறித்து, சுஷாந்தின் மூத்த சகோதரி, மீட்டூ சிங்கிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.