ராஜ்யசபாவில் பெரும்பான்மையை நோக்கி நகரும் பா.ஜ.,

ராஜ்யசபாவில் பாஜவின் கரங்கள் ஓங்குகிறது. பெரும்பான்மை இடத்தை நோக்கி நகர்கிறது என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராஜ்யசபாவுக்கு நேற்று முன்தினம் (ஜூன் 19) நடந்த தேர்தலில், எட்டு இடங்களில் வெற்றி பெற்றதன் வாயிலாக, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் பலம், 101 ஆக அதிகரித்துள்ளது. பெரும்பான்மைக்கு, இன்னும், 22 இடங்களே தேவைப்படுவதால், அடுத்த ஒரு ஆண்டுக்குள் எளிதாக அதை அடைந்து விட முடியும் என, பா.ஜ.,வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

ராஜ்யசபாவில், மொத்தம், 245 உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு, 123 உறுப்பினர்கள் தேவை. ஆனால், ஆளும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணிக்கு, 90 உறுப்பினர்களே இருந்தனர். பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் இல்லாததால், ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில், பா.ஜ.,வுக்கு கடும் சிக்கல் நீடித்தது.

இந்நிலையில், 10 மாநிலங்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டிருந்த, 24 உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிவடைந்ததை அடுத்து, புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கு மார்ச், 24ல் தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக, தேர்தல் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்த, 24 இடங்களில், ஐந்து இடங்களுக்கான உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இதில் மூன்று பேர், பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள, 19 இடங்களுக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. இதில், எட்டு இடங்களில், பா.ஜ., அபார வெற்றி பெற்றது. குஜராத்தில் நான்கு இடங்களுக்கு நடந்த தேர்தலில், மூன்று இடங்களை, பா.ஜ.,வும், ஒரு இடத்தை காங்கிரசும் கைப்பற்றின.



ஒட்டு மொத்தமாக, 24 இடங்களில், 11 இடங்களை, பா.ஜ., கைப்பற்றியதை அடுத்து, ராஜ்யசபாவில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியின் பலம், 101 ஆக அதிகரித்துள்ளது.இதன் வாயிலாக, ராஜ்யசபாவில் முதல் முறையாக, தே.ஜ., கூட்டணி யின் பலம், மூன்று இலக்க எண்ணை கடந்துள்ளது. காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணிக்கு, 86 உறுப்பினர்கள் உள்ளனர்.

தே.ஜ., கூட்டணி பெரும்பான்மை பெறுவதற்கு, இன்னும், 22 இடங்களே தேவைப்படும் நிலையில், அடுத்த ஒரு ஆண்டில் நடக்கும் தேர்தல்களின் மூலம் எளிதாக இந்த எண்ணிக்கையை அடைந்து விடலாம் என, அந்த கட்சியினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்., - காங்கிரஸ் மற்றும் சில சிறிய கட்சிகள், பா.ஜ.,வுக்கு ஆதரவான நிலையில் உள்ளதால், தற்போது, ராஜ்யசபாவில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றுவதில், தே.ஜ., கூட்டணிக்கு பெரிய அளவில் சிக்கல் எதுவும் இருக்காது என, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.