கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்துக்கு படகு போக்குவரத்துக்கு மீண்டும் துவக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபத்துக்கு நேற்றுமுன்தினம் முதல் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டது. எட்டு மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் பயணம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

குகன், பொதிகை, விவேகானந்தா ஆகிய 3 படகுகள் இயக்கப்பட்டு வந்த நிலையில், புதிதாக வாங்கப்பட்ட திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகளும் நேற்று முன்தினம் முதல் இயக்கப்பட்டன. அந்த படகுகளையும் சேர்த்து மொத்தம் 5 படகுகளும் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சென்று வந்தது.

படகு போக்குவரத்து இயக்கப்பட்ட முதல் நாளில் மொத்தம் 530 பேர் பயணம் செய்தனர். படகுகளில் அனைவரும் முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 2-வது நாளாக நேற்றும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவெளியின்றி தொடர்ச்சியாக படகுபோக்குவரத்து நடந்தது. நேற்று 673 பேர் படகில் பயணம் செய்தனர்.

நிவர் புயலால் கன்னியாகுமரியில் எந்த பாதிப்பும் இல்லாததால் படகு போக்குவரத்து எந்தவித தடையுமின்றி நடந்தது. இதனால் நேற்றும் சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை படகில் சென்று ரசித்தனர். கடந்த 2 நாளில் மொத்தம் 1,203 சுற்றுலா பயணிகள் விவேகானந்தர் மண்டபத்தை பார்வையிட்டனர்.