கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படும் - முதல்வர் தகவல்

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நேற்று குமரி மாவட்டத்துக்கு வருகை புரிந்தார்.
நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அ.தி.மு.க. அரசு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், ஏழை எளியவர்களின் முன்னேற்றத்துக்காகவும் பாடுபட்டவர்களுக்கு பெருமை சேர்க்கும் வகையில் சாலைகள் மற்றும் மேம்பாலங்களுக்கு அவர்களுடைய பெயர்களை சூட்டி பெருமைப்படுத்தி வருகிறது.

பொதுமக்களின் வசதிக்காகவும், பணியாளர்களின் பணிச்சூழலை மேம்படுத்துவதற்காகவும் தோவாளை யூனியன் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் ரூ.3 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும். தோவாளை சுற்றுப்புற கிராம மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் போக்குவரத்து வசதியை மேம்படுத்தும் வகையில் தோவாளையில் இருந்து மாதவலாயம் கிராமச்சாலை ரூ.3 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க சுற்றுலா தலங்களுக்கு பொதுமக்கள் அனுமதி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. தற்போது நோய் பரவல் குறைந்துள்ள நிலையில் கன்னியாகுமரி சுற்றுலா தலத்துக்கு பொதுமக்கள் வந்து செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை- திருவள்ளுவர் சிலை ஆகியவற்றுக்கு படகு போக்குவரத்து இன்று முதல் ஆரம்பிக்கப்படும். விவேகானந்தர் பாறையில் இருந்து திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் சுமார் 35 கோடி ரூபாய் செலவில் தொங்கு பாலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்.

பள்ளிகளை திறப்பது தொடர்பாக நேற்று முன்தினம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றுள்ளது. அது அரசின் ஆய்வில் இருக்கிறது. அரசு உயர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். ஆய்வின்படி விரைவாக அறிவிக்கப்படும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து விதமான நோய்களின் தாக்கம் எவ்வளவு இருக்கிறது என்பது குறித்து ஆய்வறிக்கை உள்ளது. அதை அரசு பார்க்கும். அதன்படி குமரி மாவட்டத்தில் புற்றுநோய் தாக்கம் அதிகமாக இருந்தால் புற்றுநோய் சிகிச்சை மையம் அமைப்பது தொடர்பாக அரசு பரிசீலனை செய்யும். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.