ஊட்டி படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகளை கவர புதிய வடிவில் படகுகள்

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் கீழ் ஊட்டி படகு இல்லம், பைக்காரா படகு இல்லம், தொட்டபெட்டா மலைச்சிகரம் ஆகிய சுற்றுலா தலங்கள் ஊரடங்கு தளர்வுக்கு பின் திறக்கப்பட்டு உள்ளன. இங்கு இயற்கை காட்சிகளை கண்டு ரசித்தபடியும், அணை மற்றும் ஏரியில் இதமான காலநிலையை அனுபவித்த படியும் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்கிறார்கள்.

ஊட்டி படகு இல்லத்தில் 40 மிதி படகுகள், 9 துடுப்பு படகுகள், 31 மோட்டார் படகுகள் உள்ளன. எட்டு மாதங்களுக்கு பின்னர் திறக்கப்பட்டதால் சுற்றுலா பயணிகள் தங்களது குடும்பத்தினருடன் படகு சவாரி செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இங்கு இரண்டு இருக்கைகள் கொண்ட மிதி படகில் சவாரி செய்ய ரூ.190, நான்கு இருக்கைகளுக்கு ரூ.290, நான்கு இருக்கைகள் கொண்ட துடுப்பு படகில் சவாரி செய்ய ரூ.660, எட்டு இருக்கைகள் கொண்ட மோட்டார் படகில் சவாரி செய்ய ரூ.670, பத்து இருக்கைகளுக்கு ரூ.810, 15 இருக்கைகளுக்கு ரூ.1,150 என கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

படகு இல்லம் திறக்கப்பட்ட பின்னர் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். படகு இல்லத்துக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளை கவரவும், படகு சவாரி செய்வதை ஊக்குவிக்கவும் பல வடிவங்களில் புதிதாக 24 படகுகள் வரவழைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மயில், வாத்து, டிராகன் போன்ற உருவங்களில் வடிவமைக்கப்பட்ட மிதி படகுகள் வந்துள்ளன.

அதேபோல் ஊட்டி அருகே பைக்காரா படகு இல்லத்தில் 20 மோட்டார் படகுகள், நான்கு அதிவேக மோட்டார் படகுகள் சுற்றுலா பயணி களுக்காக இயக்கப்பட்டு வருகிறது. அங்கு எட்டு இருக்கைகள் கொண்ட இரண்டு மோட்டார் படகுகள் புதிதாக வரவழைக்கப்பட்டுள்ளது. மேலும் 24 படகுகள் ஓரிரு நாட்களில் வந்துவிடும் என சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது.