பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் பாலிவுட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் ராஜ்புத் தற்கொலை வழக்கில் அவரது தந்தை விரும்பினால் சி.பி.ஐ. விசாரணைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் நேற்று தெரிவித்தார்.

இதுகுறித்து பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் கூறுகையில், அவருக்கு என்ன நேர்ந்தாலும் அது சரியல்ல. இது அரசியலும் அல்ல, பீகார் காவல்துறை தனது கடமையை நிறைவேற்றி வருகிறது. எங்கள் டிஜிபி அவர்களிடம் பேசுவார். பாட்னா காவல் கண்காணிப்பாளர் பினாய் திவாரி மும்பையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

பாட்னா காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்கிற்கு மகாராஷ்டிரா காவல்துறை, பீகார் காவல்துறையுடன் இணைந்து ஒத்துழைக்க வேண்டும் என பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பீகார் முதல் மந்திரி நிதிஷ்குமாரை டெலிபோனில் தொடர்பு கொண்ட சுஷாந்த் சிங் தந்தை, இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்ற கோரிக்கை விடுத்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கேட்டுக்கொண்டதன்படி, தற்போது சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க பீகார் அரசு பரிந்துரை செய்துள்ளதாக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.