டேங்கர் லாரி மீது பனியன் கம்பெனி பஸ் மோதி விபத்து - 40 பேர் காயம்

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதிகளை சேர்ந்த 52 தொழிலாளர்கள் ஈரோடு மாவட்டம் பெருந்துறை சிப்காட் பகுதியில் உள்ள பனியன் கம்பெனிக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் நேற்று காலை வழக்கம் போல், கம்பெனிக்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு சென்றனர்.

பின்னர் அவர்கள் பணி முடிந்து பஸ்சில் ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தனர். பஸ்சை டிரைவர் ரவிச்சந்திரன் (வயது 52) என்பவர் ஓட்டி வந்தார். எடப்பாடி அருகே சங்ககிரி ரோட்டில் மாதேஸ்வரன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ஒரு டேங்கர் லாரி பழுதாகி நின்று இருந்தது. நேற்று இரவு 8 மணி அளவில் தொழிலாளர்கள் வந்த பஸ் எதிர்பாராத விதமாக நின்று இருந்த டேங்கர் லாரி மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சின் முன்பக்கம் அப்பளம் போல நொறுங்கியது.

மேலும் இடிபாடுகளுக்குள் சிக்கி பஸ்சில் வந்த தொழிலாளர்கள் 40 பேர் காயம் அடைந்தனர். இவர்களில் 20 பேர் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து எடப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.