தடுப்பூசி நிறுவனங்களுக்கான அனுமதி பற்றி முன்கூட்டியே தெரிவிக்க முடியாது - ராஜேஷ் பூஷண்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து கொண்டே வந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும் கொரோனா வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்தியாவில் மொத்தம் 9 கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு ஆய்வு பணிகள் நடந்து வருகின்றன. இதில் 6 கொரோனா தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனையில் உள்ளன. 3 தடுப்பூசிகள் மருத்துவ பரிசோதனைக்கு முந்தைய கட்டத்தில் உள்ளன. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அடுத்த சில வாரங்களில் அனுமதி வழங்கப்படலாம் என மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ராஜேஷ் பூஷண் கூறுகையில், கடந்த 4 நாட்களில் புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா, ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம், அமெரிக்க மருந்து நிறுவனமான பைசரின் இந்திய நிறுவனம் ஆகியவை தங்களது தடுப்பூசிகளை அவசரகால பயன்பாட்டுக்கு பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என விண்ணப்பித்து உள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், அடுத்த சில வாரங்களில் சில தடுப்பூசி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படலாம். இதுபற்றி முன்கூட்டியே தெரிவிக்க முடியாது. அதுபற்றி இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் தான் முடிவெடுக்கும் என்று கூறினார்.